செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளியில் சாலை மறியல் நடந்த போது எடுத்த படம்.

கிருஷ்ணகிரி அருகே இருசமூகத்தினரிடையே தகராறு - சாலை மறியல்

Published On 2021-01-16 08:58 GMT   |   Update On 2021-01-16 08:58 GMT
கிருஷ்ணகிரி அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் சாலை மறியல் நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளியில் இருவேறு சமூக மக்களிடையே கடந்த ஒரு ஆண்டாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் நேற்று எருதுவிடும் விழாவிற்காக கிராமத்தில் தடுப்புகள் கட்டியிருந்தனர். இன்னொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தடுப்புகளை உடைத்தும், கழற்றி வீசினார்கள்.

இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலை எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, சில இளைஞர்கள் தெருவில் நின்று கொண்டு தொல்லை கொடுப்பதால் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. தற்போது விழாவிற்காக கட்டப்பட்டு இருந்த தடுப்புகளை அகற்றி உள்ளனர். நாங்கள் எருதுவிடும் விழா நடத்த அனுமதியும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும். தொடர்ந்து பிரச்சினை செய்து வரும் எதிர் தரப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தனர்.

இதையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். 5 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் ஒரு மணி நேரம் நீடித்தால், அச்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், இருதரப்பினர் இடையே மோதல் சம்பவம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News