செய்திகள்
நீரேத்தானில் நெற்கதிர்கள் விளைந்த வயல்களில் மழை நீர் தேங்கி நிற்பதை காணலாம்.

வாடிப்பட்டியில் 3 மணி நேரம் பலத்த மழை- வயல்களில் தண்ணீர் புகுந்தது

Published On 2021-01-08 11:03 IST   |   Update On 2021-01-08 11:03:00 IST
வாடிப்பட்டி பகுதியில் 3 மணி நேரம் பெய்த பலத்த மழையால் வயல்வெளியில் தண்ணீர் தேங்கி நின்றது.
வாடிப்பட்டி:

வாடிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் பகல் முழுவதும் வெயில் அடித்தது. ஆனால் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இடைவிடாமல் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் பள்ளமான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. அதேபோல் வயல்வெளிகளில் தற்போது பயிரிடப்பட்டுள்ள நெல் வயல்களில் தண்ணீர் புகுந்தது. மேலும் வயலில் தேங்கிய தண்ணீரை விவசாயிகள் அந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தற்போது சில இடங்களில் நெற்பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்திலும், சில இடங்களில் விளைந்தும் இருக்கிறது. இந்த விளைந்த நெல் வயலுக்குள் தண்ணீர் தேங்கி இருப்பதால் விவசாயிகள் மிக கவலை அடைந்துள்ளனர்.

கொட்டாம்பட்டி பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, பள்ளபட்டி, மங்களாம்பட்டி, குன்னாரம்பட்டி, சொக்கலிங்கபுரம், கச்சிராயன்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. மழையை நம்பி நிலக்கடலை பயிர் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரையிலும் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் பல இடங்களில் குடியிருப்பு பகுதியை சூழ்ந்தது. மதுரை டி.ஆர்.ஓ. காலனி பகுதியில் மழை நீர் குடியிருப்பு பகுதியை சுற்றி தேங்கி நின்றது. மேலும் மழையால் சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டன. இதனால் வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டனர்.

இந்தநிலையில் மதுரை நகர் பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் மழை பெய்தது. பலத்த மழையாக பெய்யாவிட்டாலும் சாரல் மழையாக இடைவிடாமல் பெய்து கொண்டிருந்தது.

Similar News