செய்திகள்
கைது

போலி சான்றிதழ் கொடுத்து, ஆசிரியராக பணியாற்றியவர் கைது - 21 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்

Published On 2021-01-08 05:59 IST   |   Update On 2021-01-08 05:59:00 IST
காவேரிப்பட்டணம் அருகே போலி சான்றிதழ் கொடுத்து 21 ஆண்டுகளாக அரசு ஆசிரியராக பணியாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). இவர், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி அடைந்து, ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளதாக சான்றிதழ் கொடுத்து கடந்த 1999-ம் ஆண்டு ஆசிரியர் பணி பெற்றார். பின்னர், காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளிபுதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பணியில் இருந்தார்.

இந்தநிலையில் அவர், போலி சான்றிதழ் கொடுத்து பணி நியமனம் பெற்றதாக, 2019-ம் ஆண்டு குண்டலப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார். அதன் பேரில் கிருஷ்ணகிரி முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் முருகன் மற்றும் காவேரிப்பட்டணம் வட்டார கல்வி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

அதில், ராஜேந்திரன், 10-ம் வகுப்பே தேர்ச்சி பெறவில்லை என தெரியவந்தது. மேலும், போலியாக 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி சான்றிதழ்களை பெற்று, பணியில் சேர்ந்து, 21 ஆண்டுகளாக அரசை ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து, கடந்த அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலர் கலாவதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதரிடம் புகார் அளித்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் ராஜேந்திரன் தலைமறைவானார். இதுகுறித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு காவேரிப்பட்டணம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு விசாரணைக்காக வந்த அவரை காவேரிப்பட்டணம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News