செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பை கண்டித்து மாடுகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

Published On 2020-12-25 15:53 IST   |   Update On 2020-12-25 15:53:00 IST
எருமப்பட்டி அருகே சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தி்்ல் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி நாமக்கல்- துறையூர் செல்லும் சாலையில் பொன்னேரி பிரிவில் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கறவை மாடுகளுடன் திரண்டனர். பின்னர் சாலை வசதிக்கோரியும், சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பை கண்டித்தும் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருளாளன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் லோகநாதன், சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி ஆகியோர் மறியல் நடந்த இடத்துக்கு சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பொன்னேரி அருகே வேளாண்மை அலுவலக பகுதியில் இருந்து பாண்டியன் தோட்டம் வரை உள்ள சாலையை பயன்படுத்தி வந்ததாகவும், தற்போது தனிநபர் ஒருவர் சாலை ஆக்கிரமிப்பு செய்து ேகட் அமைத்துள்ளார்.

இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த பாதையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சரி செய்தனர். இந்த ஆர்ப்பாட்டததால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News