செய்திகள்
கைது

கொருக்குப்பேட்டையில் 3½ வயது குழந்தையை கொன்ற தாய் 11 மாதங்களுக்கு பிறகு கைது

Published On 2020-12-25 09:09 IST   |   Update On 2020-12-25 09:09:00 IST
3½ வயது குழந்தையை அடித்துக் கொன்றதாக 11 மாதங்களுக்கு பிறகு குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையால் அவர் சிக்கினார்.
பெரம்பூர்:

சென்னை கொருக்குப்பேட்டை இளையா முதலி தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி நதியா (வயது 33). இவர்களுக்கு 3½ வயதில் இஷாந்த் என்ற மகன் இருந்தான். பிறக்கும்போதே இந்த குழந்தை மனவளர்ச்சி குன்றி இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி குழந்தை இஷாந்த், கட்டிலில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக கூறி சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் நதியா சேர்த்தார். 6 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த குழந்தை இஷாந்த், ஜனவரி மாதம் 28-ந்தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதுபற்றி கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில் 11 மாதங்களுக்கு பிறகு நேற்றுமுன்தினம் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில், உயிரிழந்த மனவளர்ச்சி குன்றிய அந்த குழந்தையின் தலையில் பலமாக தாக்கப்பட்டதால் மண்டை ஓடு உடைந்து, அதனால் குழந்தை இறந்து இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து கொருக்குப்பேட்டை போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, குழந்தையின் தலையில் அடித்துக்கொன்றதாக குழந்தையின் தாய் நதியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனவளர்ச்சி குறைந்த குழந்தை என்பதால் அடித்துக்கொன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் கொன்றாரா? இல்லை வேறு யாராவது குழந்தையை கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

குழந்தையை அடித்துக்கொன்றதாக பிரேத பரிசோதனை அறிக்கை தகவலால் 11 மாதங்களுக்கு பிறகு தாய் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News