செய்திகள்
பணம் பறிமுதல்

ஆந்திர எல்லை சோதனைச்சாவடிகளில் பணம் பறிமுதல்- மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2020-12-20 06:32 GMT   |   Update On 2020-12-20 06:32 GMT
ஆந்திர எல்லை சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்திய சோதனையில் 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேலூர்:

தமிழகம் முழுவதும் ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநில எல்லைகளில் செயல்படும் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் கடந்த 12ம் தேதி அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையோரத்தில் உள்ள காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு சோதனைச் சாவடிகளில் ஆய்வு நடைபெற்றது.

இதில், சேர்க்காட்டில் நடைபெற்ற சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயமேகலாவின் பர்ஸில் இருந்து ரூ.4,725, மேஜை டிராயரில் இருந்து ரூ.22,850 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்தும் பணியில் 2 தனி நபர்கள் ஈடுபட்டிருந்தனர்.

விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பொம்மசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த தினகரன் என்ற ஷியாம் (40) என்றும், சேர்க்காடு பகுதியை சேர்ந்த தேசிய நெடுஞ்சாலை துறையின் சாலைப் பணியாளர் லோலன்தாஸ் (50) என்பது தெரியவந்தது.

இதில், லோலன்தாஸ் சாலைப் பணியாளராக இருந்தாலும் அவ்வப்போது வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் விதிகளை மீறி பணியாற்றி வந்துள்ளார். தினகரனிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணம், லோலன்தாஸிடம் இருந்து ரூ.1,300 பணம் என பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.38 ஆயிரத்து 875 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயமேகலா, தினகரன், லோலன்தாஸ் ஆகியோர் மீது வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சப் பணம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் நடைபெற்ற சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்கண்ணன் பாக்கெட்டில் இருந்து ரூ.3 ஆயிரம் பணம், அவரது மேஜை டிராயரில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அங்கு விதிகளை மீறி பணியாற்றி வந்த தனிநபர் பாபு என்பவரிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.3 ஆயிரம் என மொத்தம் 94 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்கண்ணன், பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2 செக்போஸ்ட்டில் நடந்த திடீர் சோதனையில் 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள், 5 பேரையும் விசாரணைக்கு விரைவில் அழைக்கப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News