செய்திகள்
குழந்தை

அரசு ஆஸ்பத்திரியில் பெண் வேடமிட்டு குழந்தை கடத்த வந்ததாக திருநங்கைக்கு அடி-உதை

Published On 2020-12-18 09:57 GMT   |   Update On 2020-12-18 09:57 GMT
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பெண் வேடமிட்டு சுற்றிய ஆண் ஒருவரை பொதுமக்கள் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு அருகே காத்திருப்பு அறை ஒன்று உள்ளது. இதில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்களின் உறவினர்கள் இரவு நேரங்களில் தங்கி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு சுடிதார் அணிந்து மிடுக்காக இருந்த ஒரு பெண் குழந்தை பிரிவு பகுதியில் சுற்றி கொண்டு இருந்தார். காத்திருப்பு அறை அருகே சென்றார்.

அங்கிருந்த பொதுமக்களுக்கு அந்த பெண்ணை பார்த்ததும் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் விசாரணை செய்தனர்.

அப்போது அந்த பெண்ணின் குரல் ஆண் குரல் போல் இருந்தது. சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரது தலைமுடியை சோதனை செய்தனர்.

அப்போது அவர் தலையில் அணிந்து இருந்த டோப்பா கீழே விழுந்தது. அவர் பெண் வேடமிட்ட ஆண் என்று தெரிய வந்தது. பெண் வேடமிட்டு குழந்தையை கடத்த அல்லது செல்போன் திருட வந்திருக்கலாம் என நினைத்த பொதுமக்கள் அவரை அடித்து உதைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த புறக்காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு விசாரித்தனர்.

இதில் வாலிபர் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் திருநங்கையாக மாறி வருவதால் சுடிதார் அணிந்து டோப்பா முடி வைத்தது தெரியவந்தது.

அவருடைய உறவினர் ஒருவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க வந்ததாகவும் இரவில் அந்த பகுதியில் சுற்றிய போது பொதுமக்கள் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

இது பற்றி தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News