செய்திகள்
கைது

ஓசூரில் சிகரெட் நிறுவன மேலாளர் கடத்தல் வழக்கில் 6 பேர் கைது

Published On 2020-12-15 15:36 IST   |   Update On 2020-12-15 15:36:00 IST
ஓசூரில் சிகரெட் நிறுவன மேலாளர் கடத்தல் வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பீட்டர் லூயிஸ் (வயது 45). இவர் ஓசூரில் இயங்கி வரும் ஐ.டி.சி. சிகரெட் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2-ந்தேதி நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு காரில் திரும்பி கொண்டிருந்த பீட்டர் லூயிசை மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவருடைய காரிலேயே கடத்தி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதையறிந்த அந்த நபர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலத்திற்கு அருகே காருடன் பீட்டர் லூயிசை இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் தேன்கனிக்கோட்டை அடுத்த பெரியபூதக்கோட்டையை சேர்ந்த அமரேஷ் (28), முகலூரை சேர்ந்த தியாகராஜ் (32), குந்துமாரனப்பள்ளியை சேர்ந்த குருபிரசாத் (26), சூளகிரி அடுத்த சினிகிரிப்பள்ளியை சேர்ந்த வினோத்குமார் (30), கிருஷ்ணகிரி குப்பண்ணன் தெருவை சேர்ந்த நதீம் அகமது (22), அதே பகுதியை சேர்ந்த பவித்ரன் (20), தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளியை சேர்ந்த அருண்குமார் (20), கிருஷ்ணமூர்த்தி (20) ஆகிய 8 பேர் பீட்டர் லூயிசை கடத்தி சென்றது தெரியவந்தது. இதில் அருண்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த அமரேஷ் உள்ளிட்ட 6 பேரை சிப்காட் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News