செய்திகள்
இளையான்குடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்களை படத்தில் காணலாம்.

இளையான்குடியில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Published On 2020-12-12 14:20 IST   |   Update On 2020-12-12 14:20:00 IST
இளையான்குடியில் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளையான்குடி:

இளையான்குடி அருகே உள்ள நாக முகுந்தன்குடி ஊராட்சி மன்றத்தில் தலைவராக தமிழ்ச்செல்வி பாலசுப்பிரமணியன் உள்ளார். இந்த கிராமத்தில் பல்வேறு சமுதாய மக்கள் ஒற்றுமையுடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட கொடிமங்கலம், புதுக்குளம், பெரியவண்டாளை ஆகிய கிராம மக்கள் திரண்டு இளையான்குடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த முற்றுகை குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் ஒரு தரப்பினர் தங்களது சுயநலத்துக்காக மக்களிடம் பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர், வீட்டுவசதி, மின்சாரம், பாசன வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் எங்கள் கிராமத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

எனவே அந்த தரப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் ஒற்றுமையை காண்பிப்பதற்காக தான் இந்த முற்றுகை போராட்டம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம், போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

Similar News