செய்திகள்
ஆதார் அட்டை

உரங்கள் வாங்குவதற்கு விவசாயிகள் ஆதார் அட்டையுடன் செல்ல வேண்டும்- கலெக்டர் அறிவிப்பு

Published On 2020-12-11 10:13 GMT   |   Update On 2020-12-11 10:13 GMT
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது ஆதார் அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என கலெக்டர் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் ராபி பருவ பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகையை பதிவு செய்து விற்பனைப் பட்டியல் பெற்று தாங்கள் சாகுபடி செய்யும் நிறத்திற்கு ஏற்றவாறு தேவையான உரங்களை மட்டுமே வாங்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சில்லறை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யும் போது கட்டாயமாக ஆதார் அட்டையுடன் கைரேகை பதிவு செய்துதான் உரம் விற்பனை செய்ய வேண்டும்.

ஒரு நபருக்கு அதிக உரம் வழங்கக்கூடாது. ஒரே நபரின் பெயரில் உரம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். மொத்த விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. வெளிமாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யவும் கூடாது. சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பும்போது உரிய ஆவணத்துடன் வாகனங்களை அனுப்ப வேண்டும்.

உர விற்பனையாளர்கள் அனுமதி பெறாத இடங்களில் உரங்களை இருப்பு வைத்துக்கொள்ள கூடாது. வேளாண் துறையின் அனுமதி பெறாத நிறுவனங்களின் உரங்களை கொள்முதல் செய்ய கூடாது. விவசாயிகள் அல்லாதவர்களுக்கு உரம் விற்பனை செய்யக் கூடாது. மீறினால் உரக் கட்டுப்பாட்டு சட்டம், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News