செய்திகள்
கோப்பு படம்.

காரைக்குடி போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்- உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு

Published On 2020-12-07 14:48 IST   |   Update On 2020-12-07 14:48:00 IST
காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்தனர். உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த காதல் ஜோடி தஞ்சம் அடைந்துள்ளதாகவும், அவர்களது உறவினர்கள் திரண்டு வந்ததால் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சுஜிதா என்பவரை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

குறிப்பாக பெண் வீட்டில் காதலை ஏற்க மறுத்தனர். இதனால் காதல் ஜோடியினர் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

பின்னர் திருமணம் செய்து கொண்ட ராஜேஷ்- சுஜிதா ஊருக்கு செல்ல பயந்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.

இதற்கிடையில் காதல் திருமணம் குறித்த தகவல் கிடைத்ததும் ராஜேஷ்- சுஜிதா உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் காதல் ஜோடி பற்றி விசாரித்தனர்.

இதில் ராஜேஷ்- சுஜிதா காரைக்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த தகவல் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்களும் காரைக்குடி போலீஸ் நிலையம் வந்தனர். இதனால் அங்கு சிறிது பதற்றம் நிலவியது.

காரைக்குடி போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஏற்கனவே புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காதல் ஜோடி புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Similar News