செய்திகள்
லாரியில் கடத்த முயன்ற ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - டிரைவர் உள்பட 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து பர்கூர் வழியாக சென்னைக்கு லாரியில் கடத்த முயன்ற ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பர்கூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் சரக குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய தகவலின் பேரில், பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் குழுவினர் பர்கூர் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் அந்த லாரியில் வந்தவர்கள் பர்கூரை அடுத்த கோட்டூரை சேர்ந்த டிரைவர் வடிவேல் (வயது 40), கிளீனர் வேல்முருகன் (30) என தெரிய வந்தது.
இவர்கள் குஜராத்தில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு லாரியை ஓட்டி வந்த போது, பெங்களூரு நைஸ் ரோடு சுங்கச்சாவடி அருகே அந்த லாரியை மர்ம நபர்கள் நிறுத்தி அதில் பார்சல்களை ஏற்றி சென்னையில் இறக்கினால் ரூ.5 ஆயிரம் தருவதாக கூறியதும்,
அந்த பார்சல்களை ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேல், வீரமணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.