செய்திகள்
கோப்புபடம்

சிவகங்கை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட 59 பேர் கைது

Published On 2020-12-06 15:30 IST   |   Update On 2020-12-06 15:30:00 IST
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிவகங்கை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட 59 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:

வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து சிவகங்கை மாவட்டத்தில் 3 நாட்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் ்நடத்த போவதாக அறிவித்திருந்தனர். இதையொட்டி நேற்று சிவகங்கை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ.குணசேகரன் தலைமையில் கட்சியினர் சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மத்திய தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தனர். ஆனால் போலீசார் அந்த பகுதியில் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர்.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கயிற்றை தாண்டிக்கொண்டு முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் தபால் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

முற்றுகை போராட்டம் நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மு.கண்ணகி, கோபால் எம்.எஸ்.கண்ணன், விஸ்வநாதன், சந்திரன்,முத்துபாண்டி, முத்துராமலிங்கபூபதி, ஒன்றிய செயலாளர் உலகநாதன், திருநாவுக்கரசு உள்பட 59 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News