செய்திகள்
பலத்த மழை காரணமாக பப்பாளி மரம் முறிந்து விழுந்து மூதாட்டி பலி
பலத்த மழை காரணமாக பப்பாளி மரம் முறிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பையனூர் கிராமத்தில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது பையனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நீலா (வயது 51) என்பவர் தனது இரு பேத்திகளுடன் தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வீசிய பலத்த காற்றில் சாலையோரம் நின்றிருந்த பப்பாளி மரம் ஒன்று காற்றில் முறிந்து நீலா மீது விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக 10 அடி தூரத்தில் அவரது இரு பேத்திகளும் சென்றுவிட்டதால் நல்லவேளையாக இந்த விபத்தில் சிக்காமல் உயிர் தப்பினர்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பப்பாளி மரம் விழுந்துபெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.