செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரையில் அமர்ந்து பொழுதை கழித்த சுற்றுலா பயணிகள்.

தீபாவளி விடுமுறையையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2020-11-16 12:51 GMT   |   Update On 2020-11-16 12:51 GMT
தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடற்கரை பகுதி களைகட்டியது.
மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள திரண்டனர். குறிப்பாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையிலேயே பொழுதை கழித்தனர். இதனால் கடற்கரை பகுதி களைகட்டியது.

நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஆகவே சுற்றுலா பயணிகள் கடலில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். கரைப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கடலில் இறங்காத வாறு சுற்றுலா பயணிகளை அவ்வப்போது அறிவுறுத்தினர்.

கடற்கரைக்கு வந்த வாலிபர்களும், காதல் ஜோடிகளும் கடற்கரை கோவிலுக்கு பின்புறம் உள்ள பாறைகளின் மேல் ஏறி நின்று செல்பி மோகத்தில் கொஞ்சம் கூட ஆபத்தை உணராமல் அலட்சியமாக செல்பி, புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர். ஆபத்தான பகுதி அங்கு செல்ல வேண்டாம் என போலீசார் பலமுறை எச்சரித்தும் யாரும் அதை பொருட்படுத்தாமல் கூட்டம், கூட்டமாக பாறைகளின் மேல் ஏறி புகைப்படம் எடுத்து விட்டு சென்றதை காண முடிந்தது.

தவறி விழுந்தால் பாறையில் விழுந்து மரணம் ஏற்படும் என்று சற்றுகூட சிந்திக்காமல் கரடுமுரடாக, கூர்மையான கத்தி போன்ற வடிவமைப்பில் இருந்த பாறையில் நின்று கொண்டிருந்தனர். இவர்களின் இதுபோன்ற செயல் குடும்பத்துடன் உல்லாச பயணம் வந்திருந்த சுற்றுலா பயணிகளிடையே முக சுழிப்பை ஏற்படுத்தியது.

மேலும் நேற்று சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி மற்றும் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
Tags:    

Similar News