செய்திகள்
பிரதமர் மோடி பாராட்டிய கல்பாக்கம் மாணவி.

பிரதமர் மோடியின் பாராட்டை பெற்ற 4-ம் வகுப்பு மாணவி

Published On 2020-11-15 09:15 IST   |   Update On 2020-11-15 09:15:00 IST
கல்பாக்கத்தை சேர்ந்த 4-ம் வகுப்பு பள்ளி மாணவி பிரதமர் மோடியின் பாராட்டை பெற்றுள்ளார்.
கல்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் வசித்து வருபவர் அர்ச்சுனன் பிரதீப். இவர் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். கேரளாவை சேர்ந்த இவருக்கு அபர்ணா என்ற மனைவியும் இந்திராஅர்ஜூன் (9) என்ற மகளும் உள்ளனர். இந்திரா அர்ஜூன் கல்பாக்கம் நகரியத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா தொற்று விடுமுறையானதால் தனது வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்பு மூலம் தொடர்ந்து படித்து வருகிறார்.

மேலும் இவர் விலங்கியல், வேதியியல் உள்பட பாடங்களை அனிமேஷன் முறையில் தத்ரூபமாக விளக்கி காணொலி காட்சி பதிவு மூலம் டுவிட்டர், முக நூல் என சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த பகிர்வை ஏராளமான மாணவ- மாணவிகள் பெற்றோர்கள் பார்த்துள்ளனர். மேலும் சிறப்பான சிந்தனைத்திறன், ஞாபக சக்தியுடன் உரிய விளக்கத்துடன் பாடம் நடத்தி வருகிறார். புலி, சிங்கம், யானை, பாம்பு, கரடி, சிறுத்தை, நரி உள்பட பல்வேறு மிருகங்களின் தன்மை பற்றியும் அவற்றின் வாழ்விடம் பற்றியும் அனிமேஷன் முறையில் விளக்கி கூறுகிறார்.

இது தவிர மனித உடல் உறுப்புகளின் தனித்தனி செயல்பாடுகள் பற்றியும் அனிமேஷன் முறையில் தெளிவாக விளக்கி கூறுகிறார். இந்த தகவல்களை தனது பள்ளி தோழிகளுக்கும் பகிர்ந்து கொரோனா ஊரடங்கு விடுமுறையை பயன் உள்ள வகையில் செயல்படுத்தி வருவதை அவரது பெற்றோர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இதனை பிரதமர் நரேந்திரமோடி பார்த்துள்ளார்.

இதையடுத்து அவர் தனது டுவிட்டர் பதிவில் அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் இணைய தளத்திலும் அனிமேஷன் பாட திட்ட வீடியோ வெளியாகியுள்ள நிலையில் மாணவியின் அசாத்திய திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பள்ளிப்படிப்பு தவிர ஓட்டப்பந்தயம், பேச்சுப்போட்டி, பாட்டுபோட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா என அனைத்து போட்டிகளில் இவர் கலந்து கொண்டு பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.

Similar News