செய்திகள்
கோவளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தற்கொலை மிரட்டல்
பா.ஜ.க. பொறுப்பாளரை கைது செய்ய கோரி கோவளத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் ஸ்ரீதர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
திருப்போரூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. குறித்து அவதூறாக பேசிய படூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பொறுப்பாளர் புருஷோத்தமன், இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனா கட்சி தலைவர் ஸ்ரீதர் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோவளத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் ஸ்ரீதர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் அமைந்துள்ள 200 அடி உயர உயர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுசேரி சிப்காட் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஸ்ரீதரை மீட்க முயன்றனர். அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஸ்ரீதர் கீழே இறங்கி வந்தார்.