செய்திகள்
கடலில் மீன்பிடிக்க சென்ற கோடியக்காடு மீனவர்கள் 4 பேர் மாயம்
கடலில் மீன்பிடிக்க சென்ற கோடியக்காடு மீனவர்கள் 4 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களின் கதி என்ன? என்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காட்டை சேர்ந்த வீரப்பன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே ஊரைச் சேர்ந்த சற்குணம் (வயது35), உத்திராபதி (20), அமிர்தலிங்கம் (60), காளிதாஸ் (40) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் மதியம் கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிக்கல் தூரத்தில் வலைவீசி மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
பின்னர் மீன்பிடித்து விட்டு வலையை திரும்பி எடுத்தபோது படகு விசிறியில் வலைகள் சிக்கிக் கொண்டதால் படகை இயக்க முடியாமல், பழுதடைந்து நின்று விட்டது. அந்த வழியே வந்த மற்ற மீனவர்கள் பார்த்து படகை நகர்த்த முயற்சி செய்தும் முடியவில்லை, வலையையும் அகற்ற முடியவில்லை. பின்னர் மற்ற மீனவர்கள் ஊருக்குச் சென்று ஆட்களை அழைத்து வருகிறோம் என்று கோடியக்காடு மீனவர்களிடம் கூறி விட்டு கரைக்கு வந்து விட்டனர்.
இதை தொடர்ந்து கோடியக்காடு மீனவர்களை மீட்க மற்ற மீனவர்கள் படகில் நேற்று சென்றனர். அப்போது அங்கு படகை காணவில்லை. மீனவர்களும் மாயமாகி இருந்தனர். பலத்த காற்று வீசுவதாலும், கடல் சீற்றமாக காணப்படுவதாலும் படகு எந்த பக்கம் சென்றது என்பது தெரியவில்லை என்றும், காற்று நீரோட்டத்தை பார்க்கும் பொழுது மல்லிபட்டினம், ஜகதாப்பட்டினம் பகுதிகளுக்கு படகு சென்றிருக்கலாம் என தேடி சென்ற மீனவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மீனவ சங்கத்தினர் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். படகுடன் மாயமான கோடியக்காடு மீனவர்களை சக மீனவர்களும் இரண்டு படகுகளில் தேடி வருகிறார்கள். மாயமாகி உள்ள கோடியக்காடு மீனவர்களின் கதி என்ன? என்று தெரியாமல் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.