செய்திகள்
முதல்-அமைச்சர் நாராயணசாமி

4 வேட்டி, சட்டையுடன் சிறை செல்லவும் தயார்- நாராயணசாமி ஆவேசம்

Published On 2020-11-01 01:51 GMT   |   Update On 2020-11-01 01:51 GMT
என்மீது 10 ஊழல் புகார்களை சி.பி.ஐ.க்கு கவர்னர் கிரண்பேடி அனுப்பி உள்ளார். 4 வேட்டி, சட்டையுடன் சிறை செல்லவும் தயார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:

புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்திராகாந்தி நினைவுநாள் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் ஆகியோர் கலந்து கொண்டு தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது நாராயணசாமி பேசியதாவது:-

புதுவையில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்காக நாம் தயாராக வேண்டும். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்தும், எதிர்க்கட்சிகளை சாடி வியூகம் அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 4½ ஆண்டுகளாக மக்களைப்பற்றி கவலைப்படாமல் தூங்கியவர்கள் தற்போது வெளியே வரத்தொடங்கி உள்ளனர். மக்கள் நலத்திட்டங்களை முடக்கியவர்களுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்கவில்லை.

தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் எப்படியெல்லாம் செயல்படுகிறார். ஆனால் புதுவையில் நமக்கு எதிர்க்கட்சி கவர்னர் கிரண்பேடி தான். தேர்தலுக்கு முன்பாக நாம் 4 முக்கிய திட்டங்களை நிறைவேற்றவேண்டும்.

முதலாவதாக அனைவருக்கும் ரூ.5 லட்சத்துக்கு பயன் கிடைக்கும் ஆயுள்காப்பீடு திட்டத்தை செயல்படுத்தவேண்டும். 2-வதாக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் கருணாநிதி பெயரிலான திட்டம், 3-வதாக 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டேப்லெட் வழங்கவேண்டும். 4-வதாக 100 யூனிட் வரை அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கவேண்டும்.

புதுவையில் ஒருபுறம் கொரோனா பாதிப்பு உள்ளது. மறுபுறம் அரசின் திட்டங்களை இன்னொரு கொரோனா தடுத்து நிறுத்துகிறது. கவர்னர் கிரண்பேடி நமது அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்தி வருகிறார்.

காவலர் பணிக்கு வயதுவரம்பு 22 ஆக இருந்தது. அதை 24 ஆக உயர்த்திகேட்டோம். அவர் அனுமதி அளிக்கவில்லை. இறுதியாக மத்திய அரசு வரை சென்று அனுமதிபெற்று வந்தோம். இந்த பணிக்காக 15 ஆயிரம் பேர் மனுபோட்டு உள்ளனர். இதற்கான தேர்வு பணியை மின்னணு முறையில் நடத்த ஈசாக் என்ற தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தோம். ஆனால் கொரோனாவை காரணம்காட்டி அவர்கள் வர மறுத்துவிட்டனர்.

அதனால் நமது அதிகாரிகளை வைத்தே நடத்த கூறினோம். ஆனால் வராதவர்களை கவர்னர் கிரண்பேடி கூப்பிடச் சொல்கிறார். இந்த தேர்வினை நடத்தக் கூடாது என்பதுதான் அவரது எண்ணம். அவரது எதிர்ப்பினையும் மீறி வயது வரம்பு 24 ஆக உயர்த்தப்பட்டதால் தேர்வினை தடுத்து நிறுத்துகிறார்.

இத்தகைய போராட்டத்துக்கு இடையேதான் ஆட்சியை நடத்தி வருகிறோம். அதனால் கட்சிக்காரர்களாகிய உங்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. இத்தகைய போராட்டங்களுக்கு இடையேயும் சிறிய மாநிலங்களில் சிறப்பான நிர்வாகம் அளித்த மாநிலமாக புதுச்சேரி 2-வது இடத்தில் உள்ளது. கவர்னரின் தடைகள் இல்லாவிட்டால் இன்னும் நிறைய திட்டங்களை செயல்படுத்தி இருப்போம்.

கவர்னர் கிரண்பேடி என்மீது இதுவரை 10 ஊழல் புகார்களை சி.பி.ஐ.க்கு அனுப்பி உள்ளார். 4 வேட்டி, சட்டையுடன் நான் சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளேன். நமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். அதை கட்சி அலுவலகத்துக்குள்ளேயே முடித்துக்கொள்ள வேண்டும். வெளியே ஒற்றுமையாக செயல்படுவோம்.

கடந்த 2016-ம் ஆண்டு ராஜீவ்காந்தி சமாதியில் புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர சூளுரைத்தோம். அதேபோல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர இப்போது சூளுரை எடுப்போம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
Tags:    

Similar News