செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

நெட்டப்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் திருட்டு

Published On 2020-10-24 06:26 GMT   |   Update On 2020-10-24 06:26 GMT
நெட்டப்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெட்டப்பாக்கம்:

நெட்டப்பாக்கம் லலிதா கார்டனை சேர்ந்தவர் பாலாஜி (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஹரிபிரியா. இவர் தனது குழந்தைகளுடன் கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூருவில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். பாலாஜி மட்டும் இங்குள்ள வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

சம்பவத்தன்று பாலாஜி வேலைக்கு செல்வதற்காக தனது வீட்டை பூட்ட முயன்றார். அப்போது கதவில் இருந்த சாவியை காணவில்லை. எனவே வேலைக்கு நேரமாகி விட்டதால் மாற்று சாவியை கொண்டு வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி செலவுக்கு பணம் எடுப்பதற்காக வீட்டின் பீரோவை திறந்தார். அப்போது அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த தங்க சங்கிலி, நெக்லஸ், மோதிரம் உள்பட 13 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1000 ரொக்க பணத்தை காணவில்லை.

பாலாஜியை தினமும் கண்காணித்து வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டு கதவில் இருந்த சாவியை எடுத்து வைத்துக்கொண்டு அவர் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டை திறந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். திருடுபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும்.

நகை, பணம் திருடு போனதால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி, நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி வீட்டில் பணம், நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News