செய்திகள்
உடன்குடி பகுதியில் முருங்கை மரங்கள் நடப்பட்டு உள்ளதை காணலாம்

உடன்குடி பகுதியில் முருங்கை சாகுபடி மும்முரம்

Published On 2020-10-17 13:21 IST   |   Update On 2020-10-17 13:21:00 IST
உடன்குடி பகுதியில் முருங்கை சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி மிகுந்த பகுதிகளில் ஒன்றான உடன்குடி பகுதியில் ஆண்டுதோறும் மழைப்பொழிவு குறைவாகவே உள்ளது. இதனால் கருப்புக்கட்டிக்கு பெயர் பெற்ற உடன்குடி பகுதியில் தற்போது முருங்கை சாகுபடியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

முருங்கை மரத்தின் குச்சிகளை சரிவாக வெட்டி எடுத்து, அதனை இடைவெளி விட்டு சீராக நடுகின்றனர். முருங்கை சாகுபடிக்கு குறைவான தண்ணீரே தேவை என்பதால் அவற்றை நடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மழைப்பொழிவு குறைவாக உள்ள உடன்குடி பகுதியில் வறட்சி மிகுந்து வருகிறது. இதனால் குறைவான தண்ணீரே தேவைப்படும் முருங்கை சாகுபடிக்கு பெரும்பாலான விவசாயிகள் மாறி விட்டனர். நாட்டு முருங்கை மற்றும் யாழ்ப்பாணம் ரக முருங்கை வறட்சியை தாங்கி வளரக்கூடியது. அவை 3 மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடுகின்றன.

மேலும் முருங்கைக்காய்களுக்கும் நல்லவிலை கிடைக்கிறது. இதனால் முன்பு தென்னை, வாழை பயிரிட்ட விவசாயிகளும் தற்போது முருங்கை சாகுபடிக்கு மாறி விட்டனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News