செய்திகள்
மண்புழு உரம் தயாரிக்கும் பணியை மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆய்வு செய்தார்

மண்புழு உரத்தை அதிகம் தயாரிக்க வேண்டும்- மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2020-10-13 10:11 GMT   |   Update On 2020-10-13 10:11 GMT
காரைக்கால் மாவட்ட அறிவியல் நிலையத்தில் மண்புழு உரத்தை அதிகமாக தயாரித்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வலியுறுத்தினார்.
காரைக்கால்:

காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆய்வு மேற்கொண்டார். அவரை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ரத்தின சபாபதி வரவேற்று, வேளாண் அறிவியல் நிலைய செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

தொடர்ந்து, தேசிய தோட்டக்கலை இயக்ககத்தின் நிதியுதவியில் நடைபெறும் உயர்ரக நாற்றாங்கால் அமைத்தல், பழத்தோட்டம் அமைத்தல், காளான் வித்து உற்பத்தி மையம், பால் மற்றும் சிப்பிக் காளான் உற்பத்திக் குடில், விவசாயிகளுக்கான பயிற்சி அரங்கம், மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள கால்நடை குடில் களை பார்வையிட்டு அதன் பராமரிப்பு முறை, நாட்டு மாடு ரகங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா அவர்களிடம் கூறுகையில், இயற்கை மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் மண்புழு உரத்தை அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அவற்றை தாராளமாக வழங்க வேண்டும் என்றும், வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன், பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய கால்நடை மருத்துவர் கோபு, செந்தில், கதிரவன், திவ்யா, உதவி தொழில்நுட்ப வல்லுனர்கள் அனந்தநாராயணன், அந்தோணிதாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News