செய்திகள்
விபத்து

கோவை அருகே கார் மோதி 1½ வயது குழந்தை பலி

Published On 2020-10-11 12:01 GMT   |   Update On 2020-10-11 12:01 GMT
தடுப்பூசி போட அழைத்து சென்ற போது கார் மோதி 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
சரவணம்பட்டி:

கோவை சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையம் இ.பி காலனியை சேர்ந்தவர் சின்னையன் (வயது 27). இவர் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா (24). இவர்களுக்கு 5 வயதில் மகனும், 1½ வயதில் திங்கள்விழி என்ற மகளும் இருந்தனர்.

நேற்று முன்தினம் சின்னையன், சத்யா ஆகியோர் தங்களது 1½ வயது மகள் திங்கள்விழிக்கு தடுப்பூசி போடுவதற்காக கோவில்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர். மோட்டார் சைக்கிளை சின்னையன் ஓட்டினார். சத்யா, குழந்தையை கையில் வைத்துக் கொண்டு பின்னால் அமர்ந்திருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார், சின்னையனின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் சத்யா நிலைதடுமாறி கீழே விழுந்த போது கையில் இருந்த திங்கள்விழி தூக்கி வீசப்பட்டாள். இதில் அந்த குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அவருடைய பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு குரும்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள் விழி பரிதாபமாக இறந்தாள்.

இது குறித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அந்த காரின் எண் பதிவாகி இருந்ததாக தெரிகிறது. அதன் அடிப்படையில் விபத்து ஏற்படுத்தியவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

தடுப்பூசி போட அழைத்து சென்ற போது கார் மோதி குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News