செய்திகள்
மந்தைவெளி சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

சேதராப்பட்டில் மாசு கலந்த குடிநீர் வினியோகத்தை கண்டித்து போராட்டம்

Published On 2020-10-11 11:36 GMT   |   Update On 2020-10-11 11:36 GMT
சேதராப்பட்டில் மாசு கலந்த குடிநீர் வினியோகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேதராப்பட்டு:

சேதராப்பட்டு பழைய காலனி மக்களுக்கு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் மாசு கலந்து மஞ்சள் நிறத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான தீப்பாய்ந்தான், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் ஆகியோரிடம் முறையிட்டனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்த நிலையில் நேற்று காலை வழக்கத்தை விட மோசமாக மாசு கலந்த குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த காலனி மக்கள் மாசு கலந்த குடிநீரை பாத்திரங்கள் மற்றும் பாட்டில்களில் பிடித்துக் கொண்டு வந்து அங்குள்ள மந்தைவெளி சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சேதராப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை அவர்கள் ஏற்க மறுத்து வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இதற்கு உடனடியாக தீர்வு கண்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.

உடனே போலீசார் ஆணையர் ஆறுமுகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதனை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 1 மணிநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News