செய்திகள்
கர்நாடக பூங்காவில் பிகோனியா மலர்கள் அடங்கிய 20 ஆயிரம் பூந்தொட்டிகள் மூலம் அலங்காரம் செய்யப்பட்டுள்ள காட்சி.

இ-பாஸ் பெற்று கர்நாடக சுற்றுலா பயணிகள் நீலகிரி வர அனுமதி

Published On 2020-10-11 01:30 GMT   |   Update On 2020-10-11 01:30 GMT
நீலகிரி மாவட்டத்துக்கு வர கர்நாடக சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:

கொரோனா பரவலை தடுக்க மலைபிரதேசமான நீலகிரி மாவட்டத்துக்கு பிற மாவட்டங்களில் இருந்து வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதலில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது நீலகிரியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்தவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் இ-பாஸ் வழங்கப்படுகிறது

ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடக அரசின் ஸ்ரீ தோட்டக்கலை பூங்கா உள்ளது. இந்த பூங்கா திறக்கப்பட்டது குறித்து தகவல் தெரியாததால், மற்ற பூங்காக்களுக்கு வந்தவர்கள் அங்கு செல்லாமல் இருந்தனர். கர்நாடகா சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து, மற்றவர்களும் செல்ல தொடங்கி உள்ளனர். பூங்காவில் 2-வது சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை கவர மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன. பிகோனியா மலர்கள் அடங்கிய 20,000 பூந்தொட்டிகளுடன் மலைச்சரிவில் வரிசையாக மலர் அலங்காரம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 5 வண்ணங்களில் சால்வியா மலர்களை கொண்டு 10,000 பூந்தொட்டிகள் மூலம் தொட்டியில் இருந்து மலர்கள் விழுவது போல மலர் அருவி அமைக்கப்பட்டு இருக்கிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.

சைக்கிளமன், ரெனன்குளஸ், ஆர்கிட், ஜெரேனியம், ஸ்டார் மற்றும் ரெக்ஸ் போன்ற ரகங்களை சேர்ந்த பிகோனியா, லெம்ப்ராந்தஸ் உள்பட 200 ரகங்களை சேர்ந்த 50 ஆயிரம் பூந்தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 2-வது சீசனையொட்டி நடைபாதை ஓரத்தில் அலங்கார செடிகள் அழகாக வெட்டி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் பூங்கா திறக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர்.

கர்நாடகா தோட்டக்கலை பூங்காவுக்கு வருகை தரும் கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பூங்காவுக்குள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News