செய்திகள்
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டபோது எடுத்தபடம்.

ஓட்டல்களில் தீ விபத்தை தவிர்ப்பது எப்படி?- அதிகாரி விளக்கம்

Published On 2020-10-10 04:22 GMT   |   Update On 2020-10-10 04:22 GMT
ஓட்டல்களில் தீ விபத்தை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்தார்.
ஊட்டி:

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் தீ விபத்தை தவிர்ப்பது தொடர்பாக வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டம், கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஊட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி ரவிக்குமார் கூறியதாவது:-

கடைகள் காற்றோட்டமாக இருப்பது அவசியம். சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு ஆகியவை கடைகளின் முன்பகுதி ஓரத்தில் வைத்து பராமரிக்கப்பட வேண்டும். சிலிண்டரில் பொருத்தப்படும் டியூப் ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு பேரலில் தண்ணீர் நிரப்பி அதில் சிலிண்டரை வைக்க வேண்டும். அடுப்பின் அருகே ஒரு சாக்குப்பையை நனைந்த நிலையில் எப்பொழுதும் வைத்து இருக்க வேண்டும். எப்போதும் தயார் நிலையில் சிறிய அளவிலான தீயணைப்பு கருவியை வைத்திருக்க வேண்டும். டீக்கடைகளை மார்க்கெட்டின் வெளிப்பகுதியிலேயே வைத்து நடத்தினால் விபத்துகளை தவிர்க்கலாம். மார்க்கெட்டின் உள்பகுதியில் டீக்கடைகள் நடத்தினால் பாதுகாப்பாக நடத்த வேண்டும்.

இல்லையென்றால் ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் உள்ளே சென்று உடனடியாக தீயை அணைப்பதற்கு சிரமமாகவும், சேதங்கள் அதிகமாக ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. டீக்கடைகளில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் 2 மட்டுமே வைத்து இருக்க வேண்டும். இதற்கு மேல் கூடுதலாக வைக்கக்கூடாது. டீக்கடை வைத்து நடத்தி வருகிறவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைகளில் கட்டிட விதிமுறைகளின்படி மின் அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு டீக்கடை மற்றும் ஓட்டல்களில் வெப்பக்காற்று வெளித்தள்ளும் மின்விசிறி கண்டிப்பாக அமைக்க வேண்டும். இந்த பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்தால் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நகராட்சி வருவாய் அலுவலர் பால்ராஜ் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News