செய்திகள்
ஈரோடு தலைமை தபால் அலுவலகம் மூடப்பட்டு உள்ளதை காணலாம்

ஊழியர்களுக்கு கொரோனா- ஈரோடு தலைமை தபால் அலுவலகத்துக்கு 3 நாட்கள் விடுமுறை

Published On 2020-10-09 09:40 GMT   |   Update On 2020-10-09 09:40 GMT
ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் 2 ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதால் அலுவலகத்துக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு:

ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் சுமார் 10 நாட்கள் தபால் அலுவலகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கம்போல் தபால் அலுவலகம் செயல்பட தொடங்கியது. கிருமி நாசினி தெளித்தல், தபால் அலுவலகத்துக்கு வருபவர்களின் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வசதி, சமூக இடைவெளியை கடைபிடிக்க குறிப்பிட்ட நபர்களை மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதிப்பது உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் 12 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்கள். இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் தபால் பிரிப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் சுகாதார துறையின் அறிவுறுத்தலின் படி ஈரோடு தலைமை தபால் அலுவலகத்துக்கு நேற்று முதல் 3 நாட்கள் விடுமுறை அறிவித்து ஈரோடு கோட்ட முதுநிலை தபால் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். அதன்படி நேற்று தபால் அலுவலகம் மூடப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அலுவலகம் மூடப்பட்டதால் தபால் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகத்தில் நடந்து வந்த பணப்பரிமாற்றம், மற்ற பகுதிகளில் இருந்து வரும் தபால்களை பிரித்து அனுப்பி வைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கியது. வருகிற 12-ந் தேதி முதல் தபால் அலுவலகம் திறக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News