செய்திகள்
யானை

கூடலூர் அருகே விவசாயி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை

Published On 2020-09-23 11:12 GMT   |   Update On 2020-09-23 11:12 GMT
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
கூடலூர்:

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. பின்னர் அங்கு பயிரிட்டு இருந்த வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி மொய்தீன் குட்டி என்பவரது வீட்டின் பின்பக்க சுவரை காட்டு யானை உடைத்தது. மேலும் அங்கு பயிரிட்டு இருந்த வாழைகளை சேதப்படுத்தியது. இந்த சமயத்தில் வீட்டில் இருந்த மொய்தீன் குட்டி குடும்பத்தினர் கூச்சலிட்டனர். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் விடியற்காலையில் காட்டு யானை அங்கிருந்து வனத்துக்குள் சென்றது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த ஓவேலி வனச்சரகர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் விளக்கம் அளித்தனர்.
Tags:    

Similar News