செய்திகள்
முக ஸ்டாலின்

தமிழகத்தில் 6 மாதத்துக்குள் ஆட்சி மாற்றம் உறுதி- கருணாநிதி சிலை திறப்பு விழாவில் முக ஸ்டாலின் பேச்சு

Published On 2020-09-18 13:15 IST   |   Update On 2020-09-18 13:15:00 IST
நெய்வேலியில் என்எல்சி தொமுச சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 9 அடி உயர முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை திமுக தலைவர் முக ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்து பேசினார்.

நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. தொ.மு.ச. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 9 அடி உயர முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

மத்திய-மாநில அரசுகள் தொழிலாளர்களின் துரோக அரசுகளாக உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மட்டுமே 2 அரசுகளும் செயல்படுகிறது.

தொழிலாளர்களுக்காக பிரதமர் அறிவிக்கும் பல கோடி ரூபாய் திட்டங்கள் வாக்குறுதிகளாகவே உள்ளது. நானும் விவசாயிதான் என்று கூறும் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தவர்.

நீட் தேர்வு காரணமாக இறந்த மாணவர்களின் மரணம் தற்கொலை அல்ல. அது மத்திய-மாநில அரசுகள் நடத்திய கொலைகள். ஆனால், இந்த தற்கொலைக்கு காரணம் தி.மு.க.தான் என்று சட்டசபையில் முதல்- அமைச்சர் பேசுகிறார்.

மத்தியில் பாரதிய ஜனதா மற்றும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி செய்த 2016-ம் ஆண்டுதான் முதன் முதலில் நீட் தேர்வு நடந்தது. இந்த விசயத்தில் அ.தி.மு.க. திட்டமிட்டு பொய்பிரசாரம் செய்து வருகிறது. 2013-ம் ஆண்டு மே 5-ந் தேதி கருணாநிதி நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

பின்னர் 7 மாநில முதல்-அமைச்சர்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தாக்கல் போது தமிழக அரசு ஏன் இணையவில்லை.

முதல்-அமைச்சர் பழனிசாமியின் ஆட்சி இன்னும் 6 மாதங்கள் மட்டுமே. அதன்பின்னர் ஆட்சி மாற்றம் உறுதியாகி விட்டது. மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டனர். அதற்கேற்றவாறு நாம் தேர்தல் பணிகளை முன்னெடுக்க இருக்கிறோம். எனவே, எவரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக தேர்தல் பணிக்கு தயாராகுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News