செய்திகள்
கோப்புபடம்

பண்ருட்டியில் ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் ரூ.15 லட்சம் நகைகள் கொள்ளை

Published On 2020-09-17 07:13 GMT   |   Update On 2020-09-17 07:13 GMT
பண்ருட்டியில் ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் ரூ.15 லட்சம் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரம் முத்தையாநகரை சேர்ந்தவர் கோதண்டபாணி. பா.ம.க. பிரமுகரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி மங்களம்(வயது 60). இவர், தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார். இந்த தம்பதிக்கு சூர்யகுமார் என்ற மகனும், சுகன்யாதேவி என்ற மகளும் உள்ளனர்.

இதில் சூர்யகுமார், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராகவும், சுகன்யாதேவி அசாம் மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியையாகவும் உள்ளனர். எல்.என்.புரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த மங்களம், கடந்த 10-ந் தேதி சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். வீட்டில் வளர்த்து வரும் நாய்களுக்கு, வேலைக்காரர்கள் தினமும் வந்து உணவு வைத்துவிட்டு செல்வார் கள்.

அந்த வகையில் நேற்று காலையில் நாய்களுக்கு உணவு வைப்பதற்காகவும், வீட்டு வளாகத்தை சுத்தம் செய்வதற்காகவும் வேலைக்காரர்கள் வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கேட் பூட்டும், கதவும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி, மங்களத்துக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன்படி மங்களம், தனது மகனுடன் வீட்டிற்கு வந்து, உள்ளே சென்று பார்த்தார். அங்கு வீட்டின் அறைகளில் இருந்த 6 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறிக்கிடந்தன.

பீரோக்களில் வைத்திருந்த நகை-பணம் உள்ளதா? என்று மங்களம் பார்த்தார். ஆனால் அங்கு வைத்திருந்த 31 பவுன் நகைகள், 6 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

விசாரணையில், வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டு கதவை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் மோப்பமிட்ட அந்த நாய், அங்கிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நர்சரி வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து கதவு, பீரோக்களில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News