செய்திகள்
பெண் ஏட்டு

கத்தியால் கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை மிரட்டல் - தடுக்க சென்ற பெண் ஏட்டுக்கு வெட்டு

Published On 2020-09-11 07:38 GMT   |   Update On 2020-09-11 07:38 GMT
வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு தொழிலாளி ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 30). இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாலமுருகன் வெளியூரில் தங்கி கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கோபிசெட்டிபாளையத்தில் அவர் வேலை பார்த்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஜெயந்தியை, பாலமுருகன் 2-வதாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் பாலமுருகனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது குறித்து ஜெயந்திக்கு தெரியாது. பாலமுருகன் மூலம் ஜெயந்திக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் பாலமுருகன், பூசாரிபட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயந்தி தனது குழந்தைகளுடன், பாலமுருகனை பார்ப்பதற்காக பூசாரிபட்டிக்கு வந்தார். அப்போது பாலமுருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பதை அறிந்த ஜெயந்தி அங்கிருந்து கோபத்துடன் திரும்பி சென்றார். அதேபோன்று 2-வது திருமணம் செய்து கொண்டது குறித்து கேட்டு பாலமுருகனிடம் தகராறு செய்த ரேவதியும் கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் உசிலம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

2 மனைவிகளும் கோபித்து சென்றதால் சோகமடைந்த பாலமுருகன் நேற்று மது குடித்துவிட்டு வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், தனது முதல் மனைவி ரேவதியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கூறினார். அதற்கு மனு எழுதி வருமாறு போலீசார் கூறினர். இதற்கிடையே போலீஸ் நிலைய வாசல் முன்பு வந்த பாலமுருகன் திடீரென்று இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸ் ஏட்டு மஞ்சுளா, விரைந்து சென்று பாலமுருகனை தடுத்தார். இதில் மஞ்சுளாவுக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனால் போலீஸ் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பாலமுருகன் போலீஸ் நிலையத்தில் இருந்து சாலைக்கு ஓடினார். தற்கொலை செய்து கொள்ள போவதாக கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டினார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை மடக்கினர். மேலும் அங்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் போலீசாரும் பாலமுருகனை பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நைசாக பேசி கத்தியை பிடுங்கினர். இதைத்தொடர்ந்து காயமடைந்த பாலமுருகனையும், மஞ்சுளாவையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாலமுருகன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே போலீஸ் நிலையம் முன்பு தொழிலாளி கழுத்தை அறுத்து கொண்டது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா விசாரித்தார். பின்னர் துணிச்சலுடன் கத்தியால் வெட்டியவரை தடுத்த போலீஸ் ஏட்டு மஞ்சுளா மற்றும் இன்ஸ்பெக்டர் பவுலோசை அவர் பாராட்டினார்.
Tags:    

Similar News