செய்திகள்
குற்றாலம்

குற்றாலத்திற்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுமா?

Published On 2020-09-10 08:59 GMT   |   Update On 2020-09-10 08:59 GMT
ஊட்டி, கொடைக்கானலை போன்று குற்றாலத்திற்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி:

கொரோனா ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் பஸ் மற்றும் சிறப்பு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரசித்தி பெற்ற ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த மாவட்ட கலெக்டர்களின் அனுமதி, இ-பாஸ் பெற்று தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.

ஊட்டி, கொடைக்கானலை போன்று தென் தமிழகத்தில் புகழ்பெற்ற குற்றாலத்திற்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குளுகுளு சீசன் நிலவும். அப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். சீசன் காலத்தில் குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. பின்னர் அவ்வப்போது மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழையால் கடந்த ஒரு மாதமாக மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவிப்பகுதிகள் சுற்றுலா பயணிகள் இன்றி களை இழந்து காணப்படுகிறது.

குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குற்றாலம் மட்டும் இன்றி சுற்றுப்பகுதியான தென்காசி, செங்கோட்டை, காசிமேஜர்புரம், மேலகரம், உள்ளிட்ட பகுதிகளின் வாழ்வாதார, பொருளாதார வளர்ச்சியில் குற்றால சீசன் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு சீசன் காலத்தில் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும். ஆனால் அந்த வருவாய் கொரோனா தடை காரணமாக வருவாய் கிடைக்கவில்லை.

குற்றாலத்தில் கடை நடத்தும் வியாபாரிகள் சுற்றுலா பயணிகள் வருகையை நம்பியே உள்ளனர். கொரோனா தடை உத்தரவு காரணமாக சீசனை நம்பி உள்ள 2 ஆயிரம் குடும்பங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தி உள்ளது.

குற்றால சீசன் காலம் முடிந்து விட்ட நிலையில் அருவிகளில் குறைந்த அளவே தற்போது தண்ணீர் விழுந்து வருகிறது. எனினும் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அப்போது அருவிகளில் மீண்டும் தணணீர் ஆர்ப்பரிக்கும். எனவே சீசனில் வரமுடியாதவர்கள் இந்த பருவமழை காலத்தில் வருவர்கள்.

எனவே வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊட்டி, கொடைக்கானலை போன்று குற்றாலத்திற்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து குற்றால வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

கொரோனா தடையால் குற்றாலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீசனை மட்டுமே நம்பி வாழும் என்னை போன்ற வியாபாரிகளிக் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி போய் உள்ளது. தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற பல சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குற்றாலத்திற்கும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றி குறைந்த எண்ணிக்கையிலானவர்களை பிரித்து குளிக்க செய்வது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் குளிக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

5 மாதங்களுக்கும் மேலாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால் குற்றால அருவிகளில் மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News