செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்பதே அரசின் நிலைப்பாடு- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-08-26 15:59 IST   |   Update On 2020-08-26 15:59:00 IST
10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு நாளை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு நாளை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது.

தனி தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க கோரி அவர்கள் சார்பில் மனு வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

தற்போது பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கூடுதலாக 2.35 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் 20 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

கட்டாய கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக சில பள்ளிகள் மீது புகார் வந்தது. அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி இனி இது போல் நடக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் 40 சதவீத கல்வி கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என கூறி உள்ளது. கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் மாவட்ட கல்வி அலுவலரிடம் பெற்றோர்கள் நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.

பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் தற்போது தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் என பல்வேறு பாடத்திட்டங்கள் கற்று கொடுக்கப்படுகிறது. இதனால் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு உருவாக்கப்படுகிறது. இதனை களைய அரசு நடவடிக்கை எடுக்குமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கும் போது, மத்திய அரசுதான் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலை நாடுகளில் ஒரே பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது அவையே ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு நீக்கும் என்றார்.

Similar News