செய்திகள்
நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்த போது எடுத்த படம்.

செங்கல்பட்டு அருகே நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Published On 2020-08-25 16:03 IST   |   Update On 2020-08-25 16:03:00 IST
செங்கல்பட்டு அருகே நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு:

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் தனது மனைவியின் சகோதரி திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு குடும்பத்துடன் உளுந்தூர்பேட்டையில் இருந்து நேற்று மாலை காரில் சென்னை திரும்பி வந்தார். செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழவேலி என்ற பகுதியில் வந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் கீழே இறங்கிவிட்டார்.

அதற்குள் கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. உடனடியாக அனைவரும் காரில் இருந்து இறங்கி விட்டதால் குமார் உள்பட 6 பேரும் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்த தீ விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News