செய்திகள்
கைது

திருச்சி வாலிபர் கடத்தி கொலை- 11 பேர் கைது

Published On 2020-08-15 10:16 GMT   |   Update On 2020-08-15 10:16 GMT
ஆவூர் அருகே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் திருச்சி வாலிபரை கடத்தி கொலை செய்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவூர்:

திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்தவர் சபியுல்லா. இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள செங்களாக்குடியில் மரப்பொருட்கள் தயார் செய்வதற்காகவும், அதனை வைப்பதற்கும் சுமார் ஒரு ஏக்கரில் குடோன் கட்டியுள்ளார். ஆனால் அது உபயோகப்படுத்தாமல் பூட்டியே வைக்கப்பட்டு இருந்தது. அங்கு சாமிஊரணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அந்த குடோனில் இருந்து அழுகுரல் சத்தம் கேட்டது. இதைப்பார்த்த பெண்கள் ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செங்களாக்குடி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அந்த குடோனுக்கு சென்று பார்த்தனர். அப்போது, குடோனில் இருந்து சிலர் ஓடினர். இதைப் பார்த்த அந்த ஊர் வாலிபர்கள் குடோன் கேட்டை இழுத்து உள்புறமாக பூட்டினர். மேலும் தப்பி ஓட முயன்றவர்களில் 7 பேரை பிடித்தனர். மேலும் அங்கிருந்து 4 பேர் வெளியில் நிறுத்தி இந்த காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து குடோனுக்குள் சென்று பார்த்தபோது, வாலிபர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைபார்த்த பொதுமக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். இது குறித்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீரனூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன், மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த 7 வாலிபர்களையும் மாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் காரில் தப்பி சென்ற 4 பேரையும் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மண்டையூர் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 11 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சி கே.கே.நகரை சேர்ந்த அசாருதீன், முகமது நபி, அபுதாகீர், முகமது ஹனிப், ரெங்காநகரை சேர்ந்த சார்லஸ், காக்காத்தோப்பை சேர்ந்த ஷேக், பூந்தோட்ட தெருவை சேர்ந்த முகமது இப்ராஹிம், தென்னூரை சேர்ந்த காஜாமுகமது, பெரியார் நகரைசேர்ந்த வின்சென்ட், ஏர்போர்ட்டை சேர்ந்த இப்ராகீம் ஷா, முகமது ஆசிக் என்பது தெரியவந்தது.

இவர்களிடம் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ரகுமான் என்ற அக்பர் (வயது 35) என்பவர் ரூ.12 லட்சம் வாங்கியதாகவும், அதை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகவும் அதனால் அவரை இங்கு கடத்தி வந்து பணம் கேட்டு அடித்ததாகவும் அப்போது அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், இந்த குடோனில் மேலும் சிலர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. எனவே அந்த பகுதி முழுவதும் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அக்பர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரையும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரண நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News