செய்திகள்
பாஜக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

ஈரோட்டில் பாஜக சாலை மறியல் போராட்டம் - 75 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2020-08-08 08:25 GMT   |   Update On 2020-08-08 08:25 GMT
ஈரோட்டில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து 75 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், ஈரோடு மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த போஸ்டரில், ‘கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கந்தவேல் தண்டிக்கட்டும், கொரோனாவில் இருந்து உலகம் விடுபட நாம் அனைவரது வீடுகளிலும் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேல் பூஜை செய்திடுவோம், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் ஈரோடு மாநகரில் பெரியார்நகர், பி.பி.அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த இந்த போஸ்டரை சிலர் கிழித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் போஸ்டரை கிழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க. சார்பில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஈ.வி.என். ரோட்டில் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எஸ்.சி. அணி மாநில துணைத்தலைவர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், ‘போஸ்டரை கிழித்தவர்களை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் பா.ஜ.க.வினர் 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News