செய்திகள்
டேன் டீ அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

குன்னூர் அருகே நடைபாதையை திறக்க கோரி டேன் டீ அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

Published On 2020-08-07 14:22 GMT   |   Update On 2020-08-07 14:22 GMT
குன்னூர் அருகே நடைபாதையை திறக்கக்கோரி டேன் டீ அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
குன்னூர்:

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு பகுதியில் மாணிக்கம்பிள்ளை தோட்டம் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டேன்டீ தலைமை அலுவலகத்தை ஒட்டியுள்ள நடைபாதை வழியை கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கொரோனா பரவலை காரணம் காட்டி பொது மக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதையை டேன் டீ நிர்வாகம் அடைத்ததாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் ஒரு கி.மீ. தூரம் சுற்றி வனப்பகுதி வழியாக தங்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் வனப்பகுதி வழியாக சென்றதால் வனவிலங்கு தொல்லையால் பாதிக்கப்பட்டனர். அத்துடன் நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு செல்லவும் சிரமம் அடைந்தனர். எனவே டேன் டீ நிர்வாகம் அடைத்த பாதையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் நிர்வாக இயக்குனரை சந்தித்து மனுவும் அளித்தனர். ஆனால் டேன் டீ நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டேன் டீ அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த குன்னூர் வருவாய் ஆய்வாளர் கோபிநாத், குன்னூர் நகர கிராம நிர்வாக அதிகாரி கோபாலகிருஷ்ணன் மற்றும் மேல் குன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அத்துடன் டேன் டீ அதிகாரிகளிடமும் பேசினார்கள். இதையடுத்து அடைத்த நடைபாதையை திறக்க டேன் டீ நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News