செய்திகள்
கோத்தகிரி திறந்தவெளி மார்க்கெட்டில் கடைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள்

திறந்தவெளியில் செயல்பட்ட கடைகள் மீண்டும் சந்தைக்கு மாற்றம்

Published On 2020-08-07 10:08 GMT   |   Update On 2020-08-07 10:08 GMT
கோத்தகிரி காந்தி மைதானத்தில் திறந்தவெளியில் செயல்பட்டு வந்த கடைகள் மீண்டும் சந்தைக்கு மாற்றப்பட்டது.
கோத்தகிரி:

கோத்தகிரி தினசரி சந்தையில் காய்கறி, பழம், மீன், இறைச்சி கடைகள் என்று 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சந்தை மூடப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக சந்தையில் உள்ள கடைகள் காந்தி மைதானத்தில் திறந்த வெளியில் மாற்றப்பட்டது.

இங்கு போதிய பாதுகாப்பு இல்லாததாலும், மழை பெய்யும்போது கடைகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுவதாலும் விவசாயிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த கடைகளை மீண்டும் தினசரி சந்தை செயல்பட்ட பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று சாந்திராமு எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ. ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து சந்தையை திறக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து பூட்டி வைக்கப்பட்டு இருந்த கடைகளை வியாபாரிகள் திறந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த சந்தையில் உள்ள கடைகளை இரு பிரிவாக பிரித்து பாதி கடைகளை ஒருநாளும், மீதமுள்ள கடையை மற்றொரு நாளிலும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக கோத்தகிரி பேரூராட்சி செயல் அதிகாரி மணிகண்டன் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில் அலுவலர்கள் சந்தைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள கடைகளை ஆய்வு செய்து குறியீடு செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறும் போது கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த சந்தையில் உள்ள கடைகள் ஏ மற்றும் பி என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஏ என்று குறியீடு போடப்பட்ட கடைகள் அனைத்தும் ஒரு நாளிலும், பி என்று குறியீடு போட்ட கடைகள் மற்றொரு நாளிலும் திறக்கப்படும் என்றனர்.

அதுபோன்று திறந்தவெளி மைதானத்தில் செயல்பட்டு வந்த மீன், கோழி, ஆட்டு இறைச்சி கடைகள் செயல்பட்ட இடத்தில் மழை வெள்ளம் புகுந்ததால் அந்த கடைகளை, மேடான இடத்தில் அமைக்க பேரூராட்சி அனுமதி அளித்தது. இதையடுத்து மழையில் பாதிக்காதவாறு வியாபாரிகள் தங்கள் கடைகளை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News