செய்திகள்
ஊட்டி உழவர் சந்தையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காட்சி.

நீலகிரியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்

Published On 2020-07-12 10:48 GMT   |   Update On 2020-07-12 10:48 GMT
நீலகிரியில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முன்கூட்டியே அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
ஊட்டி:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தொற்று வேகமாக பரவி வருவதால், இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி கடந்த 5-ந் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மார்க்கெட்டுகளில் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். நீலகிரிக்குள் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கிராமப்புற மக்கள் தங்களது சொந்த வாகனங்களில் காலை முதலே பொருட்களை வாங்க நகர் பகுதிகளுக்கு வருகை தந்தனர்.

ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வரும் திறந்தவெளி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காய்கறிகளை வாங்கியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. சிலர் முகக்கவசம் அணியாமல் வந்து இருந்ததை காண முடிந்தது. அங்கு பொருட்களை வாங்க வந்தவர்கள் தங்களது கார்களை மைதானத்துக்குள் நிறுத்தியதால் பொதுமக்கள் சென்று வர சிரமப்பட்டனர். நுழைவாயில் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. ஊட்டி குதிரை பந்தய வாகன நிறுத்துமிடம் வாகனங்களால் நிரம்பி வழிந்தது.

நகராட்சி மார்க்கெட்டில் உள்ள இறைச்சி கடைகளில் மீன், கோழி, ஆடு போன்ற இறைச்சிகளை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று மதுக்கடைகள் மூடப்படுவதால் மதுபானங்களை வாங்க மது பிரியர்கள் மதுக்கடைகளுக்கு அதிகளவில் சென்று வந்தனர்.

முழு ஊரடங்கால் இன்று கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவையான பால் விற்பனை கடைகள், மருந்து கடைகள் மட்டும் வழக்கம்போல் செயல்படும். பொதுமக்கள் பால் மற்றும் மருத்துவ தேவையை தவிர்த்து வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. முழு ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Tags:    

Similar News