செய்திகள்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

கவர்னர் கிரண்பேடி இருக்கும் வரை 100 ஆண்டுகள் ஆனாலும் பாரதிய ஜனதா வளராது- அமைச்சர் பேட்டி

Published On 2020-07-08 06:15 GMT   |   Update On 2020-07-08 06:15 GMT
கவர்னர் கிரண்பேடி இருக்கும் வரை புதுவையில் 100 ஆண்டுகள் ஆனாலும் பாரதிய ஜனதா வளராது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2½ ஆண்டுகளாக கவர்னர் கிரண்பேடிக்கு செயலாளர் இல்லை. புதுவையில் உள்ள 23 அதிகாரிகளில் ஒருவருக்கு கூட அந்த தகுதி இல்லையா? கவர்னரின் ஆலோசகரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் அரசுக்கு தெரியாமல் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கவர்னர் மாளிகையில் ஏதாவது வேலை நடக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு பெண் அதிகாரியும், பிரேம் என்ற ஒரு புரோக்கரும் உள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டால் உடனே வேலை நடக்கிறது. அங்கு நிறைய பேரம் நடப்பதால் இதுதொடர்பான விவரங்களை சி.பி.ஐ.க்கு அனுப்பவும் தயார். கவர்னருக்கு தெரிந்தேதான் இது நடக்கிறது.

புதுவை அரசு பஸ்களை கவர்னரின் ஆய்வுக்கு பயன்படுத்தியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால் அது தொடர்பான கோப்புகள் தொலைந்து விட்டது என்கிறார்கள். சாலை போக்குவரத்துக் கழகம் தந்த பதிவில் அது தொடர்பான தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறுகிறது.


கவர்னர் கிரண்பேடி வீடியோ, புகைப்படத்திற்கு மாதம் ரூ.5 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது. தாசில்தாரை போலீசார் தாக்கியதில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொடுக்கக்கூடாது என்று கவர்னரே கடிதம் எழுதுகிறார். புதுச்சேரிக்கு வந்த புதிதில் 2 வருடத்துக்கு மேல் இருக்க மாட்டேன் என்றார். இப்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்தால், நான் எனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்தாமல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான திட்டங்களையும் நிறுத்துகிறார். இவரது நடவடிக்கையினால் கொரோனா கட்டுப்படுத்தியதாக சிலரிடம் கூறி விளம்பரம் செய்ய சொல்கிறார்.

நான் பலமுறை கொரோனா ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளேன். ஆனால் கவர்னர் கிரண்பேடி என்றைக்காவது வெளியே வந்தாரா? இந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்காக என்ன செய்தார். இவர் புதுச்சேரியில் இருக்கும் வரை 100 ஆண்டுகளானாலும் பாரதிய ஜனதா கட்சி வளராது. கவர்னர் மீது பல வழக்குகள் உள்ளன. நான் இவரை கண்டுபயப்பட மாட்டேன். இவரால் தான் மீனவர்களுக்கான முதியோர் பென்சன், சேமிப்பு தொகை போன்றவை கிடைக்கவில்லை.

இந்த அரசு இருக்கக் கூடாது, புதுவை மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாது என்று செயல்படுகிறார். கவர்னரின் தவறான செயல்பாட்டினால் புதுச்சேரியின் வளர்ச்சி 20 வருடம் பின் தங்கி விட்டது. இதை யாராலும் தூக்கி நிறுத்துவது கடினம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News