செய்திகள்
கொரோனா வைரஸ்

கூனிச்சம்பட்டு கிராமத்தில் கொரோனா பரிசோதனை

Published On 2020-06-27 16:14 GMT   |   Update On 2020-06-27 16:14 GMT
தொற்றால் 37 பேர் பாதிக்கப்பட்ட கூனிச்சம்பட்டு கிராமத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
திருக்கனூர்:

புதுவை மாநிலம் திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான கே.ஆர்.பாளையம், மணலிப்பட்டு, மண்ணாடிப்பட்டு, கைகிலப்பட்டு, கொடாத்தூர், கூனிச்சம்பட்டு ஆகிய கிராமங்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதில் கூனிச்சம்பட்டில் மட்டும் 37 பேருக்கு தொற்று உள்ளது.

இந்த கிராமத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கு கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தநிலையில் திருக்கனூர் பகுதியில் நோய் பரவலை தடுக்கும் வகையில் புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் கூனிச்சம்பட்டு காலனி சமுதாய நலக்கூடத்தில் கொரோனா தொற்று கண்டறியும் ஒருநாள் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. திருக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாலசுப்ரமணி தலைமையிலான மருத்துவக்குழுவினர் முழு கவச உடை அணிந்து கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமை சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரகுநாதன், டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு, மருத்துவக் குழுவினருக்கு ஆலோசனை வழங்கினர்.

முகாமில் கூனிச்சம்பட்டு, திருக்கனூர், கைகிலப்பட்டு, கொடாத்தூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், நோய் அறிகுறி உள்ளவர்கள் என சுமார் 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களின் உமிழ்நீர், சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவு ஓரிரு நாட்களில் தெரியவரும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News