செய்திகள்
புதுவை கவர்னர் மாளிகை

கவர்னர் மாளிகை செலவு இருமடங்காக உயர்வு- அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

Published On 2020-06-23 02:01 GMT   |   Update On 2020-06-23 02:01 GMT
கடந்த 10 ஆண்டுகளில் கவர்னர் மாளிகையின் செலவு இருமடங்காக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
புதுச்சேரி:

புதுவை மாநில அமைச்சரவைக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசு நலத்திட்டங்களுக்கான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் பல்வேறு கேள்விகளை கேட்டு கவர்னர் கிரண்பேடி திருப்பி அனுப்பி வருகிறார். இதனால் அரசின் வளர்ச்சி திட்டங்களை தடுத்து வருவதாக அவர் மீது அமைச்சரவை குற்றஞ்சாட்டி வருகிறது.

ஏனாமின் வளர்ச்சி திட்டங்களுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் கொடுக்கவில்லை என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றச்சாட்டி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் போராட்டம் நடத்தினார். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில் ஆந்திராவில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே வந்த நிலையில் அவர்களை ஏனாமிற்குள் அனுமதிக்க கவர்னர் கிரண்பேடி மறுத்துவிட்டார்.

இதனை கண்டித்து அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் சட்டசபையில் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே மக்கள் நலத்திட்டங்களை தடுப்பதில் என்ன நியாயம்? என கேள்வி விடுத்ததுடன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கவர்னர் மாளிகையின் கடந்த 10 ஆண்டு செலவினங்களை பெற்று வெளியிடப்போவதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து கடந்த மே 8-ந்தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தில், புதுச்சேரி கவர்னர் மாளிகையில் ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகை விவரம் குறித்த தகவலை கேட்டு இருந்தார். அதுபற்றிய விவரம் மல்லாடிகிருஷ்ணாராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை அவர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி 2010-11ல் ரூ.3.09 கோடி, 2011-12ல் ரூ.2.91 கோடி, 2012-13ல் ரூ.3.82 கோடி, 2013-14ல் ரூ.3.50 கோடி, 2014- 15 ரூ.3.55 கோடி, 2015-16 ரூ.3.27 கோடி, 2016-17 ரூ. 4.07 கோடி, 2017-18 ரூ. 4.87 கோடி, 2018-19 ரூ. 6.04 கோடி, 2019-20 ரூ. 6.19 கோடி செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 2009 முதல் 2013 ஜூலை வரை புதுவை கவர்னராக இக்பால்சிங், 2013 ஜூலை முதல் 2014 ஜூலை வரை வீரேந்திர கட்டாரியா, 2014 ஜூலை முதல் 2016 மே மாதம் வரை அஜய்குமார் சிங் ஆகியோர் கவர்னராக இருந்தார்கள். கிரண்பேடி கடந்த 2016-ம் ஆண்டு மே 29-ந்தேதி கவர்னராக பொறுப்பேற்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் கவர்னர் மாளிகையின் செலவு இருமடங்காக உயர்ந்து இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News