செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூரில் இன்று ஒரே நாளில் ராணுவ வீரர் உட்பட 7 பேருக்கு கொரோனா

Published On 2020-06-06 09:00 GMT   |   Update On 2020-06-06 09:00 GMT
வேலூரில் இன்று ஒரே நாளில் ராணுவ வீரர் உட்பட 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் தற்போது வேலூரில் கொரோனா பரவி வருகிறது.

வேலூர் ஆற்காடு சாலையில் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த மெடிக்கல் உரிமையாளர் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் இன்று அவருடைய தாயாருக்கு பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும் காட்பாடி காந்திநகரில் சென்னையிலிருந்து வந்த ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருடைய மனைவி மற்றும் அவருடைய 22 வயது மகன் பதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். அவர் 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியானது.

சதுப்பேரி பெரியமேடு கிராமத்தில் 25 வயது வாலிபர், வேலூர் அரசமரப்பேட்டையில் 65 வயது முதியவர், தாலுகா ஆபீஸ் பஸ் ஸ்டாப் பகுதியில் 30 வயது பெண் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து இவர்கள் சமீபத்தில் ஊருக்கு வந்தனர். பரிசோதனையில் இவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட 7 பேரும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலூர் மாநகர பகுதியில் ஒரே நாளில் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து யாராவது வந்து தங்கி இருந்தால் அவர்கள் குறித்த விவரங்களை உடனே அருகிலுள்ள போலீஸ் நிலைய மற்றும் சுகாதாரத் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News