செய்திகள்
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மூடப்பட்ட இ-சேவை மையம்

வேலூர் மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் மூடல்

Published On 2020-06-06 07:33 GMT   |   Update On 2020-06-06 07:33 GMT
வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு, அணைக்கட்டு தாலுகாவை தவிர்த்து பிற இடங்களில் உள்ள இ-சேவை மையங்கள் கொரோனா பரவலை தடுப்பதற்காக மூடப்பட்டன.
வேலூர்:

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், உள்ளாட்சி நிர்வாக அலுவலகங்களில் என அரசு கேபிள் டி.வி. துறைக்கு கீழ் சுமார் 10 இ-சேவை மையங்கள் மையங்கள் உள்ளது.

ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட இந்த இ-சேவை மையங்கள் பின்னர் தளர்வினால் கடந்த மாதம் 18-ந் தேதி திறக்கப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியது. ஆனால் தனியார் இ-சேவை மையங்கள் திறக்கப்படவில்லை. அரசு இ-சேவை மையங்களுக்கு மக்கள் சென்று பல்வேறு சான்றிதழ்கள் பெற விண்ணப்பித்தனர்.

நாளுக்குநாள் மக்களின் கூட்டம் இ-சேவை மையங்களில் அதிகமாக காணப்பட்டது. அவ்வாறு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் முககவசம் அணியவில்லை என்றும் புகார்கள் எழுந்தது. மேலும் அங்கு பயோ மெட்ரிக் முறை கையாளப்படுவதாலும் கொரோனா பரவல் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில் இந்த இ-சேவை மையங்களை மூட மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று காலையில் திறக்கப்பட்ட அனைத்து இ-சேவை மையங்கள் காலை 11 மணி அளவில் மூடப்பட்டது. அங்குள்ள கதவில் தேதி குறிப்பிடாமல் மூடப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை மையங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மறு உத்தரவு வந்த பின்னர் மீண்டும் திறக்கப்படும் என்றும், பேரணாம்பட்டு, அணைக்கட்டு தாலுகாவில் உள்ள இ-சேவை மையங்களுக்கு மக்கள் குறைவாக வருவதால் அந்த மையங்கள் மூடப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் கூறுகையில், இ-சேவை மையங்களில் குறிப்பிட்ட மக்களுக்கு சேவைகள் செய்ய டோக்கன் முறையை பயன்படுத்தலாம். இதனால் அதிகமாக மக்கள் கூடுவதை தவிர்க்க முடியும். மக்களின் தேவையும் ஒருபுறம் நிறைவேறும். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News