செய்திகள்
ககன்தீப் சிங் பேடி

பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு- ககன்தீப் சிங் பேடி

Published On 2020-05-30 18:05 IST   |   Update On 2020-05-30 18:52:00 IST
பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு என்று தமிழக வேளாண் செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை:

வடமாநிலத்தை சூறையாடும் வெட்டுக்கிளிகள் ஊட்டி, கோவை மாவட்டங்களில் ஊடுருவிட்டதாக பீதி பரவியது.

இதுதொடர்பாக வேளான் பல்கலைகுழு காந்தல் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டது. 2-ம் கட்ட ஆய்வுக்கு பின்னர் ‘ஊட்டியில் காணப்படும் வெட்டுக்கிளி பெரும் சேதத்தை ஏற்படுத்தும் லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் அல்ல. சாதாரணமான சிறு கொம்பு வெட்டுக்கிளிதான்’ என்று தோட்டகலை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் கூறினார்.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் தமிழக வேளாண் செயலர் ககன்தீப் சிங் பேடி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 250 உள்ளூர் வெட்டுக்கிளிகள் இருப்பதாக வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளி என கண்டறியப்பட்டுள்ளது.



தற்போது வடமாநிலங்களில் உள்ள வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் என்றும், அதன் தாக்குதல் ஜூலை வரை இருக்கும் ஆனால் ராஜஸ்தானில்தான் இருக்கும் என்று வேளாண் செயலர் கூறினார்.

ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநில எல்லைகளை கண்காணித்து வருகிறோம். வெட்டுக்கிளிகள் தாக்குதலுக்கு தயாராக இருக்கும்படி அரசு தெரிவித்துள்ளது.

பாலைவன வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த மூன்று வகையான தீர்வுகள் தயாராக உள்ளன.

மாலத்தியான், குளோர்பைரிபாஸ் போன்ற மருத்துகளை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தலாம். அரசு அறிவித்த பிறகே வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News