செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

புதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-05-27 12:05 GMT   |   Update On 2020-05-27 12:05 GMT
புதுவையை சேர்ந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாவட்டத்திற்குட்பட்ட புதுவை, மாகி பகுதியை சேர்ந்த 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் புதிதாக புதுவையை சேர்ந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முத்தியால்பேட்டை முத்தைய முதலியார் வீதியை சேர்ந்த 2 பேர், சோலைநகர், மூகாம்பிகை நகர், தர்மாபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஏற்கனவே தொற்று இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 116 பேருக்கு பரிசோதனை செய்ததில் இந்த 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இதில் மாகியில் சிகிச்சை பெற்று வரும் 2 பேரும் அடங்குவர்.

இதுதவிர புதுவை ஜிப்மர் குடியிருப்பில் வசித்து வரும் டிரைவர் வீட்டிற்கு சென்னை கொடுங்கையூரில் இருந்து வந்த குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் புதுவை ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே புதுவையில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News