செய்திகள்
புதுச்சேரி சட்டசபை

மஞ்சள் கார்டுகளுக்கு அரிசி வழங்க புதுவை அரசு தீவிர நடவடிக்கை

Published On 2020-05-26 13:55 GMT   |   Update On 2020-05-26 13:55 GMT
புதுவையில் உள்ள மஞ்சள் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு குடும்பத்திற்கு மாதம் 10 கிலோ வீதம் 2 மாதத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.
புதுச்சேரி:

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிகப்பு ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு வழிகாட்டுதலின்படி இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது.

மஞ்சள் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதனால் இலவச அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. அரிசி வாங்குவதற்கு ரூ.5 கோடியே 28 லட்சத்திற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

கடந்த வாரம் கவர்னர் இந்த கோப்பிற்கு ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து அரிசி வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு முடுக்கி விட்டுள்ளது.

புதுவையில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 200 மஞ்சள் கார்டுகள் உள்ளது. இதில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் தவிர மற்றவர்களுக்கு அரிசி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்திய உணவுக்கழகத்திற்கு அரிசிக்கான தொகை செலுத்தப்பட்டு அரிசி வாங்கப்படும். பின்னர் புதுவையில் உள்ள மஞ்சள் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு குடும்பத்திற்கு மாதம் 10 கிலோ வீதம் 2 மாதத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் கந்தசாமி கூறும்போது, வரும் 29-ந் தேதி முதல் 2 மாதத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கப்படும். 3-வது மாதத்திற்கு பட்ஜெட் கூட்டம் முடிந்தவுடன் அரிசி வழங்கப்படும். ரே‌ஷன் கடை ஊழியர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களின் வழியாக அரிசி வினியோகம் செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News