செய்திகள்
முட்டை விற்கும் டிராவல்ஸ் உரிமையாளர்

ஊரடங்கு பாதிப்பால் முட்டை வியாபாரியான டிராவல்ஸ் உரிமையாளர்

Published On 2020-05-26 07:48 GMT   |   Update On 2020-05-26 07:48 GMT
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தனது அலுவலகத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் முட்டை விற்றுவருகிறார்.
புதுச்சேரி:

ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சுற்றுலா தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா வாகனங்கள் கடும் பிசியாக இருக்கும்.

ஆனால், ஊரடங்கால் வாகனங்கள் இயக்கப்படாததால் டிராவல்ஸ் தொழில் முழுமையாக முடங்கி போய்விட்டது. இதனால் சுற்றுலா வாகன டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மாற்று தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதுபோல் புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சத்தீஷ். 10-ம் வகுப்பு படித்த இவர் கிளீனராக தனது வேலையை தொடங்கினார். அடுத்து டிரைவராகி 2003-ம் ஆண்டில் டிராவல்ஸ் உரிமையாளரானார்.

4 கார்கள், 1 பஸ், 3 வேன்களை வைத்து தொழில் நடத்தி வந்தார்.

கொரோனா ஊரடங்கால் சுற்றுலா தொழில் முடங்கியதில் சத்தீஷ் பாதிக்கப்பட்டு தற்போது டிராவல்ஸ் அலுவலகத்தில் முட்டை விற்கிறார். நாள் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரம் முதலீடு செய்து முட்டை வாங்கி விற்கிறார்.

இதன் மூலம் ரூ.200 லாபம் கிடைக்கிறது என்றும், இது குடும்ப செலவுக்கே போதவில்லை என்றும் சத்தீஷ் கூறுகிறார்.

கடந்த 60 நாட்களாய் வேலை இல்லாததால் வீதியில் மீன், இறால் விற்கும் கொடுமையான சூழ்நிலைக்கு ஊரடங்கு தள்ளி விட்டதாக டிரைவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

புதுவையை பொருத்தவரை சமீப ஆண்டுகளாக சுற்றுலா வளரும் தொழிலாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் முற்றிலும் நின்று விட்டது.

இதனால் டிராவல்ஸ் தொழில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. டிராவல்ஸ் தொழில் மீண்டும் புத்துயிர் பெற குறைந்தது 6 மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரை வயிற்று பிழைப்புக்கு வழி தெரியாமல் சுற்றுலா வாகன டிரைவர்கள் விழி பிதுங்கி உள்ளனர்.
Tags:    

Similar News