செய்திகள்
கலெக்டர் அருண்

இரவு 7 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்- கலெக்டர் வேண்டுகோள்

Published On 2020-05-26 07:07 GMT   |   Update On 2020-05-26 14:31 GMT
இரவு 7 மணிக்கு மேல் வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என கலெக்டர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கலெக்டர் அருண் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களில் மட்டும் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. புதுவையில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தற்போது ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம் போன்ற மாநிலங்களுக்கு தொழிலாளர்களை அனுப்ப ரெயில் வசதி ஏற்படுத்தித் தருமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு சமூக இடைவெளியுடன் மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம்.

புதுவையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் தொடர்பு உள்ளது. ஊரடங்கு உத்தரவு இரவு 7 மணிக்கு பிறகும் அமலில் தான் உள்ளது. எனவே தேவை இல்லாமல் மக்கள் வெளியே வரக்கூடாது. வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் கூறியதாவது:-

மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை தான் திறந்திருக்க வேண்டும். சில கடைகளில் வாடிக்கையாளர்களை சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்கள். கண்டிப்பாக மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தமிழக பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு மதுபானம் வாங்க வர முடியாத அளவுக்கு எல்லைகள் கண்காணிக்கப்படுகின்றன. அதேபோல் இ-பாஸ் இல்லாமல் யாரையும் புதுவைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News