செய்திகள்
அந்தியூர் சந்தையில் வெற்றிலை விற்பனை நடந்தபோது எடுத்த படம்.

ஊரடங்கால் அந்தியூர் வெற்றிலைச்சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைந்தது

Published On 2020-05-19 15:14 GMT   |   Update On 2020-05-19 15:14 GMT
ஊரடங்கால் அந்தியூர் வெற்றிலைச் சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைந்தது. வெற்றிலை விலை குறைந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
அந்தியூர்:

அந்தியூர் பகுதியில் உள்ள எண்ணமங்கலம், கோவிலூர், வட்டக்காடு, பிரம்மதேசம், வெள்ளையம்பாளையம், வேம்பத்தி, ஆப்பக்கூடல், அத்தாணி, கள்ளிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகளை விவசாயிகள் வாரம்தோறும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அந்தியூர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

இதற்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெற்றிலையை வாங்கி செல்வது வழக்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 மாதங்களாக அந்தியூர் வாரச்சந்தை மூடப்பட்டு உள்ளது. இதனால் சந்தைக்கு வெளியே வெற்றிலை விற்பனை நடந்து வருகிறது.

அதேபோல் நேற்று சந்தை கூடியது. ஆனால் ஊரடங்கு உத்தரவால் வியாபாரிகள் வருகை குறைந்திருந்தது. குறைவான வியாபாரிகளே வந்திருந்தனர். இதனால் வெற்றிலை விலை குறைந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

நேற்று நடந்த சந்தையில் ராசி ரக வெற்றிலை கட்டு ஒன்று ரூ.50 முதல் ரூ.70 வரையும், அதேபோல் பீடா ரக வெற்றிலை ரூ.15 முதல் ரூ.25 வரையும், செங்காம்பு ரூ.15-க்கும் என மொத்தம் ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை ஆனது.

Tags:    

Similar News